நாடி ஜோதிடம் ! புரியாத புதிரும் எதிர்காலத்தை குறுகிய வழியில் தீர்மானிக்க விரும்பும் மனிதர்களும்


காண்டம் வாசித்தல்  என்று அழைக்கப்படும் நாடி ஜோதிடம் ! இதை நம்புபவர்கள் பலர், நம்பாதவர்கள் சிலர்.சிலர் என்னைப்போன்றவர்கள். நான் எப்படி என்றால் எதையும் அளவுக்கதிகமாக நம்பாதவன். இதைப்பற்றி நான் சிறிது அறிந்திருந்த போதிலும் இதை ஆராயும் அளவிற்கு நான் போகவில்லை.சிறிது நாட்களுக்கு முன் நானும் இலங்கையில் கொழும்பு நகரில் அமைந்திருந்த ஒரு பிரபல நாடி ஜோதிடம் பார்க்கும் நிலையத்தில் எனது காண்டத்தையும் பார்த்தேன்.முதலில் வலது கை பெருவிரல் சுவட்டை எடுத்து கொண்டார்கள் .சிறிது நேரம் காத்திருக்க சொல்லிவிட்டு பின்பு  Appointment  ஒன்றை எனக்கு ஒதுக்கி தந்தார்கள் .அதன் பிறகு குறிப்பிட்ட நாளில் எனது காண்டங்களையும்  வாசித்தார்கள் .அதற்கு முன்பு என்னுடைய சுவட்டிட்கு உரிய ஓலை  இங்கு (கொழும்பு ) இல்லை என்றும் அதை இந்தியாவில் இருந்து பெறவேண்டும் எனவும் கூறினார்கள் .இறுதியில் என்னுடைய கை பெருவிரல் அடையாளத்தை  Scan செய்து இந்தியாவிற்கு  அனுப்பி அந்த ஓலையை பெற்ற பின்புதான் என்னுடைய காண்டங்களை வாசித்தார்கள் .உண்மையில் அதில் சொல்லப்பட்ட விடயங்கள் எல்லோரையும் போல் ஆச்சரியமாக இல்லாமல் ஒரு புரியாத புதிராக தான் எனக்கு தோன்றியது ..ஏனெனில் அவர்கள் என்னைப்பற்றியும்  எனது வாழ்க்கை பற்றியும் கூறிய விடங்களில் 75 சத வீதமானவை கன கச்சிதாமாக பொருந்தி  இருந்தது  மீதி 25 சத வீதமானவை எல்லாம் வெறும் ஊகிப்பாகத்தான்   எனக்கு தோன்றியது ...இப்போது விடயத்திற்கு வருகிறேன் .நாடி ஜோதிடம் உண்மையா அல்லது பொய்யா என்பது இங்கு பிரச்சினை இல்லை.ஆனால் அதை எதுவரைக்கும்  நம்பலாம் என்பதுதான் பிரச்சினை. சுருக்கமாக கூறின் இதுதான் இந்த பதிவின் நோக்கமே !  ஆனாலும் அதற்கு முன் நாடி ஜோதிடம் பற்றி நான் அறிந்த சிலவற்றை பகிர்வது முறையென நினைக்கின்றேன் .

இந்து சமய நம்பிக்கையின் படி  ,நாடி ஜோதிடம் சப்த ரிஷிகள் என்று அழைக்கப்படும்  வசிஸ்டர் ,அகத்தியர்,கௌசிகர்,வால்மீகி ,போகர் பிருகு,வியாசர்  ஆகியோரால் ஓலை சுவடிகளில் எழுதி வைக்கப்பட்டதாம்(ஆனால் அப்பொழுது அவை வாய்மொழி மூலமாகத்தான் சொல்லப்பட்டிருக்கவேண்டும் .பின்புதான் அவை ஓலை சுவடிகளுக்கு மாற்றப்பட்டிருக்கவேண்டும் ஏனெனில் இந்த ஓலை சுவடிகள் 15 ஆம் நூற்றாண்டு காலப்பகுதிக்கு முன்னைய காலப்பகுதியை சேர்ந்தவை ) .இவற்றில் இந்த உலகத்தில் பிறக்கின்ற ஒவ்வொருவரின் வாழ்க்கை பற்றிய விடயங்கள்  உள்ளடக்கப்பட்டுள்ளதாம்  . ஆரம்ப காலங்களில் தமிழ் நாடு தஞ்சாவூர் சரஸ்வதி மஹால் நூலகத்தில் இவை கண்டெடுக்கப்பட்டன (இந்த நூலகம் ஆசியாவில் மிகப் பழமையான நூலகங்களில் ஒன்றாகும்).பின்னர் ஆங்கிலேயர் காலத்தில் இந்த ஓலைச் சுவடிகள் மருத்துவ தேவைகளுககவும்  வேறு இன்ன பிற  தேவைகளுக்காகவும் ஆங்கிலேயரால் அழிக்கப்பட்டன. இன்னும் சில ஏலங்களில் விடப்பட்டன .இவற்றில் சில தஞ்சாவூர் வைத்தீஸ்வரன் கோவிலை சேர்ந்த பரம்பரை பரம்பரையாக ஜோதிடம் பார்ப்பதை தொழிலாக கொண்டவர்களால்  மீட்கப்பட்டன .அவை பின்பு அவர்களால் வாசிக்கபட்டன .பின்பு அவர்களுடைய பின்வந்த சந்ததிகளுக்கும்  போதிக்கப்பட்டன .சிலர் இந்த ஏடுகள் அழிந்து போகா வண்ணம் பிரதி எடுத்துகொண்டனர் .இன்று நாங்கள் பார்க்கும் இந்த நாடி ஜோதிடர்கள் எல்லோரும் இந்த சந்ததி வழி வந்தவர்கள் தான் . உண்மையில் இந்த ஒலைகளில் எழுதப்பட்ட விடயங்கள் யாவும் வட்டெழுத்து(தமிழ் மொழியின் ஆரம்பகால எழுத்துக்கள் ) என்று அழைக்கப்படும் எழுத்துக்களால் எழுதப்பட்டிருக்கின்றதாகவும் அதுவும் பாடல் முறையில் எழுதப்பட்டிருக்கின்றதாகவும் இந்த நாடி ஜோதிடர்கள் கூறுகின்றார்கள் .சிலர் நம்பிக்கைக்குரிய ஒரு சில வாடிக்கையாளர்களுக்கு  இந்த ஓலையை காட்டுவதாகவும் கேள்விப்பட்டிருக்கின்றேன் .ஒரு சில ஓலைகள்  சாதாரண மனிதர்களால்(தமிழர்கள் ) கூட வாசிக்ககூடியதாக இருக்கின்றதாம் .ஒரு மனிதனுடைய கை பெருவிரல் சுவடு 108 வகையான கோடுகளால் ஆனதாம்.இதன் அடிப்படையில் இந்த ஏடுகள் வகைப்படுத்தபட்டிருக்கின்றதாம்.நாடி ஜோதிடர்கள் எம்மிடம் இருந்து பெறப்படும் சுவட்டிட்கு பொருத்தமான ஓலைகளை முதலில் தெரிந்து எடுத்துக்கொள்வார்கள் . பின்பு எம்மிடம் ஒரு சில கேள்விகளை கேட்பதன் மூலம் எமக்குரிய ஓலையை தெரிந்து எடுத்துக்கொள்வார்களாம் .பின்பு அதில் கூறப்பட்டுள்ள விடயங்களை இன்றைய தமிழ் மொழியில் வாசித்து சொல்வார்களாம் .இப்படிதான் நாடி ஜோதிடம் பார்க்கப்படுகின்றது .

இந்த நாடி ஜோதிடம் பற்றிய விடயங்கள் புதிராகவும் புரிந்து கொள்ளமுடியாது  இருப்பதும் உண்மைதான்  .நாடி ஜோதிடம் மட்டுமல்ல இந்து சமயத்தின் பல விடயங்கள் இப்படித்தான் .இவை எல்லாம் ஆராய்ச்சி மூலம் அறிந்து கொள்ள மிகக்கடினமானவை அல்லது அறிய முடியாதவை.விஞ்ஞான ஆராய்ச்சி மூலம் நிருபிக்கபடாத கருதுகோள்கள்(Considerations) கொள்கைகளாக  ஏற்றுக்கொள்ளப்பட்டது  போன்று உலகத்தில் உள்ள எல்லா மதங்களிலும் கூறப்பட்டுள்ள விடயங்களும் கொள்கைகளாக  ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன அல்லது ஏற்றுக்கொள்ளப்படவேண்டும் .காரணம் இந்த நம்பிக்கைகள் எல்லாம் ஆயிரமாயிரம் ஆண்டுகளாக எம்முள் நிலவியவை .இவற்றை புறந்தள்ளுவது  என்பது கடினமானது ஒன்று .

ஆனால் இதன் மறுபக்கம் ஒன்று உள்ளது அல்லவா ? வெறும் கொள்கைகளாக இருப்பவற்றை (விஞ்ஞான ஆராய்ச்சி மூலம் நிரூபிக்கபடாதவற்றை  ) விதிகளாக மாத்தமுடியாது அல்லவா ?விதிகள் விஞ்ஞான ஆராய்ச்சி மூலம் நிரூபிக்கப்படக்கூடியவை .ஏன் பௌதீகவியல் மேதை Albert Einstein இன் ஏகப்பட்ட கருதுகோள்கள் கூட இன்னும் கொள்கைகளாகவே இருக்கின்றன .விதிகளாக ஏற்றுக்கொள்ளப்பட்டவை இன்று பல வழிகளில் பயன்படுத்தப்படுகின்றது.இதை ஏன் இங்கு நான் குறிப்பிடுகிறேன் என்றால் நடைமுறை வாழ்வு என்பது விதியின் அடிப்படையில் வாழ வேண்டியது!இங்குதான் ஒவ்வொருவருடைய நம்பிக்கையும் வேறுபடுகின்றது  .ஒருவருடைய நம்பிக்கை மூட நம்பிக்கை ஆவதும் இங்குதான் ! நம் மதத்தில் கூறப்பட்டுள்ள அனைத்து விடயங்களையும் எந்த வித ஆராய்ச்சியும் இல்லாமல் அப்படியே உள்வாங்கிக்கொண்டு அதன்படி வாழ முற்படும் போதுதான் அந்த நம்பிக்கைகள் மூட நம்பிக்கைகள் ஆகின்றன .நான் சில நாட்களுக்கு முன் நாடி ஜோதிடம் பார்த்தேன் அது என்னுடைய நம்பிக்கை.ஆனால் அதில் சொல்லப்படுவது போன்று  நான் என்னுடைய வாழ்கையில் மாற்றங்களை செய்யப்போவதில்லை .அப்படி நான் செயய்தேனானால்  என்னுடைய நம்பிக்கை மூட நம்பிக்கையாக மாறிவிடும்.என்னைப்பொறுத்தவரை நிகழ்கால வாழ்வுதான்(Present Life) உண்மையான ஒன்று .எம்முடைய எதிர்கால திட்டமிடல் எல்லாம் எம்முடைய நிகழ்கால வாழ்வு  (Present Life) மூலம் தான் கொண்டு செல்லப்படவேண்டும் .நான் இங்கு சொல்வது திட்டமிடலைத்தான் .அதன் படி  நடைமுறை வாழ்வில் நடந்து கொண்டால் எம்முடைய எதிர்காலம் நாம் நினைத்த மாதிரி  அமையும் என்பது திண்ணம் .அதை விடுத்து விட்டு இந்த ஜோதிடம் போன்றனவற்றை  பார்த்து விட்டு ,ஐயோ என்னுடைய வாழ்க்கை இப்படி போகப்போகிறதே என்று புலம்புவதை  அறியாமை என்றுதான் என்னால் கூறமுடியும் !கண் முன்னாக இருப்பதை விடுத்துவிட்டு எதிர்காலத்தை அறியவிரும்புவதில் எந்தவித அர்த்தமும் இல்லை என்பது தான் உண்மை.இல்லை என்னுடைய மூட நம்மபிக்கையை மாற்றமாட்டேன் என்பவர்களுக்கு  மீதமிருப்பது வாழ்கையை பற்றிய பயம் தான் ! இப்படி கண்மூடித்தனமாக நம்புபவர்கள் முன்வைக்கும் வாதம் இதுதான் "ஜோதிடத்தில் சொல்லப்பட்டிருக்கின்றது போல் இவருக்கு நடந்திருக்கிறது இது போல் பலருக்கும்  நடந்திருக்கின்றது ஆகவே ஜோதிடத்தில் சொல்வது உண்மைதான் அதன் போல் நாமும் நடக்கவேண்டும்".ஆனால் உண்மையில் அவர்கள் ஜோதிடத்தை பார்க்காமல் விட்டிருந்தாலும் அதுதான் நடந்திருக்கும் .அதை ஜோதிடத்தின் மூலம் அல்ல வேறு எந்த நம்பிக்கைகளாலும்  மாத்தமுடியாது என்பது தான் உண்மை . நிகழ்கால வாழ்கையின் படி வாழ்ந்திருந்தால் கூட  ஆகக்குறைந்தது சந்தோசமாவது மீதம் இருந்திருக்கும் .

பொதுவாக மத நம்பிக்கைகளை கேள்வி கேட்பவர்கள் மீது போடப்படும்  ஒரு சொல் "நாத்திகர்" .ஆனால் நான் நார்த்திகன் அல்ல ,நான் ஒரு "ஆர்த்திகன்"!ஆர்த்திகர் எல்லாம் பகுத்தறிவை மூட்டை கட்டி வைக்கவேண்டும் என்று இல்லை ,பகுத்தறிந்து பார்க்க கூடியவற்றை பகுத்தறிந்து பார்க்கவேண்டும் .மீதியை நம்புவதில் எந்தவித தப்பும் இல்லை . ஆனால் பகுத்தறிந்து பார்க்க கூடிய எல்லையை எப்போதும் விரிவுபடுத்தவேண்டும்.அப்படி விரிவுபடுத்தும் போது மீதியாக நாம் நம்பும் விடயங்கள் பகுத்தறியப்பட வேண்டி வந்தால் கூட  தயங்காமல் சிந்திக்கவேண்டும் ,மாற்றத்தை உண்டு  பண்ணவேண்டும் .அப்போதுதான் எம்மை சுற்றி ஒரு ஆரோக்கியமான சமுதாயம் உருவாகும் !அதே போன்று  எம்முடைய நமபிக்கைகள்  விஞ்ஞான ரீதியாக நிருபிக்கப்படும்போதும் அதையும் ஏற்றுக்கொள்ளவேண்டும் , அது நாடி ஜோதிடமாக இருந்தாலும் கூட !

டிஸ்கி :
இறுதியில் நான் பகிர விரும்பும் ஒரு விடயம் தயவுசெய்து எதையும் கண்மூடித்தனமாக நம்பாதீர்கள் .இறுதில் அவை "ரஞ்சிதா" புகழ் நித்தியானந்தா போன்ற Modern  சாமியார்களை உருவாக்கிவிடும் !அவர் ஒரு Trailer தான் அவரை போன்று அதிகமானவர்கள் இன்று இருக்கிறார்கள்.அவர்கள் எல்லோருடைய பெயரையும்  நான் இங்கு சொல்லபோனால்,எனக்கு பலருடைய திட்டுக்கள் விழ வாய்ப்பிருக்கினது என்பதால் இத்துடன் நிறுத்திகொள்கின்றேன்!

நாடிஜோதிடத்தை பற்றிய சில தொடுப்புக்கள்
http://www.nadi-astrology.org/History.ASP
http://thomaskjoseph.blogspot.com/2008/11/nadi-astrology-mystery-unravelled.html
http://en.wikipedia.org/wiki/Palm-leaf_manuscript
http://en.wikipedia.org/wiki/Memory_of_the_World_Register#Memory_of_the_World_Register

இந்த பதிவு உங்களுக்குபிடிக்கிறதா?பிடிக்கவில்லையா ?என்னவாயிருந்தாலும் காரணத்தை சொல்லிவிடுங்கள்! --தபோ---

6 comments:

Thejo said...

//நிகழ்கால வாழ்கையின் படி வாழ்ந்திருந்தால் கூட ஆகக்குறைந்தது சந்தோசமாவது மீதம் இருந்திருக்கும் .//

True! If you can change your future, then why do you fear what is already said? it's pointless. If you can't changey our future, still why do you fear? There's absolutely nothing you can do about it! so in either situation, the only wise decision would be just to LIVE THE MOMENT because that is the only thing that is guranteed. Enjoyed the post!

சி.பி.செந்தில்குமார் said...

நல்ல அலசல்

Thabo Sivagurunathan said...

நன்றி தேஜோ .

Thabo Sivagurunathan said...

நன்றி சி.பி.செந்தில்குமார் அவர்களே! உங்களை போன்ற மூத்த பதிவர்களின் ஆதரவு ,என்னை போன்றவர்களை ஊக்குவிப்பதாக அமையும் .

! ❤ பனித்துளி சங்கர் ❤ ! said...

நிச்சயமாக அனைவரும் அறிந்திர வேண்டிய விழிப்புணர்வு பதிவு நண்பரே..!!

Thabo Sivagurunathan said...

நன்றி பனித்துளிசங்கர் அவர்களே !